Header Ads

Header ADS

மாபெரும்_திருமண_சீர்திருத்தப்_பிரகடன_அமுலாக்கல்__மாநாடு_2023


அண்மைக் காலமாக திருமண நிகழ்வுகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற இஸ்லாத்திற்கு முரணான வீண்விரயம், ஆடம்பரம், அனாச்சாரம் மற்றும் அந்நிய கலாச்சாரம் போன்றன திருமணத்தில் பெரும் பொருளாதார சுமைகள் ஏற்படுத்தியும் அத் திருமணங்கள் இறைவனின் பேரருளை இழந்தவையாகவும், மிக விரைவில் விவாகரத்தை வேண்டி நிற்பவையாகவும் மாறிவிட்டமை தொடர்பாக எமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதற்கிணங்க காத்தான்குடிஜம்இய்யதுல் உலமா மற்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் அதன் பிரதான அங்கம் வகிக்கின்ற பள்ளிவாயல்கள், ஏனைய நிறுவனங்கள், அமைப்புக்கள், இமாம்கள், கதீப்கள், முஅல்லிம்கள், முஅல்லிமாக்கள், ஊடகவியலாளர்கள், பெண்கள் அமைப்புக்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்கள் ஆகியன இணைந்து மேற்கொண்ட பல கலந்துரையாடல்களின் முடிவாக  திருமண நடைமுறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களை ஊர் தழுவிய ரீதியில் பிரகடனம் செய்கின்ற மாபெரும் திருமண சீர்திருத்தப் பிரகடன மாநாடு 12.11.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.45 மணிக்கு காத்தான்குடி மத்திய கல்லூரியின் பரீட் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்


இம் மாநாட்டினை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா காத்தான்குடி கிளை மற்றும்  காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.


புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் இமாம் அஷ் ஷேய்க் அல் ஹாபிழ் H ஹாலித் அஹ்மத் (பலாஹி) அவர்களின் கிறாஅத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இம்மாநாட்டில் தலைமை உரை மற்றும் வரவேற்புரையை ஜம்இய்யாவின் கௌரவத்  தலைவர் அஷ் ஷேய்க் AM ஹாரூன் (ரஷாதி) அவர்கள் நிகழ்த்தினார்.


இம் மாநாட்டின் நோக்கமும் அதனூடாக எதிர்பார்க்கப்படும் அடைவுகள் தொடர்பாக சம்மேளனத்தின்  கௌரவத் தலைவர் அல் ஹாஜ் AM ரஊப் JP அவர்கள் உரை நிகழ்த்தினார்.


இம் மாநாட்டிற்கான தயார்படுத்தல்கள்  முக்கியத்துவங்கள் மற்றும் இது தொடர்பான அமர்வுகள் தொடர்பாக ஜம்இய்யாவின் கௌரவ செயலாளர் அஷ் ஷேய்க் MIM ஜாவாஹிர் (பலாஹி) BA அவர்கள் விளக்கமளித்தார்.


மேற்படி, மாநாட்டின் மிகப் பிரதான அம்சமான  பிரகடனம் காட்சிப்படுத்தப்பட்டு ஜம்இய்யாவின் தஃவா குழு செயலாளர் அஷ் ஷேய்க் MMM இல்ஹாம் (பலாஹி)BA அவர்களினால்  வாசித்துக்காட்டப்பட்டதுடன் அதன் பிரதிகள் துண்டுப்பிரசுரமாக சகலருக்கும் வழங்கப்பட்டன.


மாநாட்டின் பிரகடனத்தினை மையமாகக் கொண்ட சத்தியப் பிரமானமொன்றை சம்மேளனத்தின் கௌரவ செயலாளர் அஷ் ஷேய்க் ALM சபீல் (நளீமி) அவர்கள் நடாத்தி வைத்தார்


1992 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாறான ஊர் தழுவிய ரீதியிலான திருமண சீர்திருத்தப் பிரகடன நிகழ்வில் அதிகூடிய முயற்சிகளை மேற்கொண்ட உலமாக்கள் மற்றும் ஊர்த் தலைவர்களின் உரைகள் இம் மாநாட்டின் ஆரம்பத்தில் காணொலிகளாக திரையிடப்பட்டன.


சீரற்ற காலநிலை நிலவிய போதும் ஜம்இய்யா நிர்வாக சபை உறுப்பினர்கள் கன்னியமிக்க  உலமாக்கள், இமாம்கள், கதீப்கள், சம்மேளன உறுப்பினர்கள், ஊர்பிரமுகர்கள், கல்வியலாளர்கள்,அனைத்து பள்ளிவாயல்களினதும் நிர்வாக சபை உறுப்பினர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.


இப்பிரகடனத்தில் பின்வரும் 6 தலைப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன


 (01) சீதனம்

 (மணமகள் தரப்பிடமிருந்து பெறப்படும் அசையும் அசையா சொத்துக்கள்)


(02) மணமகன், மணமகள்

 தெரிவு 


(03) திருமணத்திற்கு முன்னர் மணமகன் பெண்பார்த்தல்  


(04) திருமண நிகழ்வுகள் 


01. திருமணப்  பேச்சுவார்த்தை


02. மருதாணி கீறும் நிகழ்வு


03. பெண்களுக்கான திருமண நிகழ்வு 

 

04. ஆண்களுக்கான திருமண நிகழ்வு


05. வலீமா விருந்துபசார நிகழ்வு 


(05) பள்ளிவாயலில் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள்


(06) பொதுவான முக்கிய நடைமுறைகள்


பிரகடனத்தை  அமுல்படுத்லுவதற்காக தீர்மானக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள சில தீர்மானங்கள் 


1. பள்ளிவாயல்கள் திருமண விண்ணப்பப் படிவம் வழங்குவதற்கு முன் இத் தீர்மானக் கோவை இரு தரப்புக்கும் வழங்கப்படுவதுடன் தேவையான நஸீஹத்களும் இமாம்களால் வழங்கப்பட்டு அதற்கேற்ப தமது திருமணம் நடைபெறும் என்று அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு இரு தரப்பினரிடமும் வாக்குறுதி பெறப்பட வேண்டும். 


2. பள்ளிவாயலில் திருமண ஒப்பந்தம் (ஈஜாப், கபூல்) நடைபெறுவதற்கு முன் இமாமினால் அல்லது பொருத்தமான ஆலிமினால் ஏழு தொடக்கம் பத்து நிமிடங்கள் உபதேசம் வழங்குதல் வேண்டும


3. திருமணத்தன்று மணமகனை பள்ளிவாயலிலிருந்து வீட்டுக்கு அல்லது மண்டபத்துக்கு அழைத்துச் செல்லும் போது மோட்டர் சைக்கிள் மற்றும் ஏனைய வாகனங்களில் ஹோன் அடித்து பவனியாகச் செல்லுதல், பட்டாசு கொளுத்துதல், மணமகனை பலவந்தமாக வேறிடங்களுக்கு அழைத்துச் சென்று தாமதப்படுத்தல், விருந்துபசார உணவுப் பொருட்களை எறிந்து பகிடி பண்ணுதல் போன்ற செயல்கள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படல் வேண்டும். இதையும் மீறி மேற்படி விடயங்கள் நடந்தால் அத்திருமணத்தை அவ்விடத்தில் அனைவரும் பகிஷ்கரிப்பதுடன் பகிரங்கப் படுத்த வேண்டும். அத்துடன் எதிர்காலத்தில் அவ்விரு குடும்பங்களிலும் நடைபெறும் எந்தொவொரு திருமணத்திற்கும் பள்ளிவாயல்களும் உலமாக்களும் ஒத்துழைப்பு வழங்காதிருத்தல் வேண்டும்.


4. ஜம்இய்யாவினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அல்லது தற்போது நடைபெறுகின்ற திருமணத்திற்கு முன்னரான உளவள ஆலோசனை மற்றும் வாழ்க்கை ஆற்றல்கள் தொடர்பான பாடநெறியை பூர்த்தி செய்து மணமகன், மணமகள் இருவரும் சான்றிதழ் பெற்றிருத்தல்  வேண்டும்.


5. வீண்விரயமான செலவுகளை அடுத்தவர்களுக்கு காட்டுவதற்காகவும் அல்லது அடுத்தவர்கள் குறைபிடித்துவிடுவார்கள் எனப் பயந்து மேற்கொள்வதை தவிர்ந்துகொள்வதுடன் அல்லாஹ்வுக்குப் பயந்து இத்தகைய நிகழ்வுகளில் பெண்கள் பங்கெடுக்காமல் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.


எனவே மேற்குறித்த தீர்மானங்களுக்கு மாற்றமாக இடம்பெறும் எந்தவொரு திருமணங்களுக்கும் உலமாக்களும் ஊர்த் தலைவர்களும்  பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களும் கலந்துகொள்வதில்லையென ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன்  இத்தீர்மானங்கள் முழுமையாக நடைமுறைக்கு  வர அனைத்துப் பொதுமக்களும்  இறைதிருப்தியை மாத்திரம் எதிர்பார்த்து  பூரணமான  ஒத்துழைப்பை வழங்கவேண்டுமென ஜம்இய்யதுல் உலமா மற்றும் சம்மேளனம் என்பன கேட்டுக்கொள்கின்றன.

No comments

Powered by Blogger.