Header Ads

Header ADS

முஸ்லிம்கள் இனத்துவ அரசியலைக் கைவிட்டு, தேசிய அரசியலில் பயணிப்பது காலத்தின் தேவை;-முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல்

முஸ்லிம்கள் இனத்துவ அரசியலைக் கைவிட்டு, தேசிய அரசியலில் பயணிப்பது காலத்தின் தேவை;

-முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல்

(முஹம்மட் கலீல்)

முஸ்லிம் சமூகம் இனத்துவ அரசியலைக் கைவிட்டு, தேசிய அரசியல் நீரோட்டத்தில் பயணிக்க வேண்டியது காலத்தின் தேவையாகும் என்று கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளராக பதவி வகித்து வந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து, அக்கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளராகவும் கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் பிரதேசங்களுக்கான ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள ஏ.எம்.ஜெமீல் தனது அரசியல் மாற்றம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

முஸ்லிம் சமூகம் இன ரீதியிலான அரசியலை முன்னெடுத்து, அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லப்படுவதை இனியும் அனுமதிக்க முடியாது.

தலைவர் அஷ்ரப் அவர்களின் மறைவுக்குப் பின்னர்- முஸ்லிம் அடையாள அரசியல் என்ற போர்வையில் கிழக்கு மாகாணத்திற்கு வெளியேயுள்ள தலைமைகள் இங்கு வந்து, இனவாதம் பேசி, மக்களை உசுப்பேற்றி, வாக்குகளை சூறையாடி, இனவாத அரசியல் செய்தமையால் சமூகம் இதுவரை அடைந்த நன்மைதான் என்ன என்று நாங்கள் கேட்க வேண்டியுள்ளது.

இதனை சுயமதிப்பீடு செய்து கொள்ளத் தவறுவோமாயின் எமது சமூகம் இன்னும் பாரிய விளைவுகளயே சந்திக்க நேரிடும் என்பதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இனப்பிரச்சினை தலைதூக்கிய காலகட்டத்தில் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் சமூகத்தின் தேவை கருதி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கி, அதில் வெற்றியும் கண்டார்.

ஆனால் அவரது அந்திம காலத்தில் இனத்துவ அரசியலை தொடர்ந்தும் முன்னெடுப்பதானது சமூகத்திற்கு ஆரோக்கியமானதல்ல என்ற தூரநோக்கு சிந்தனையுடனேயே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு பதிலீடாக நுஆ எனும் தேசிய ஐக்கிய முன்னணியை ஸ்தாபித்து, தேசிய அரசியலைத் தொடக்கி வைத்திருந்தார் என்பதை எவரும் மறுக்க முடியாது.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முஸ்லிம் சமூகமானது இனத்துவ அரசியலை விடுத்து, தேசிய அரசியலை முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் இன்னும் வெகுவாக உணரப்படுகிறது.

தேசிய ஐக்கியம், சகவாழ்வு என்பவற்றின் ஊடாகவே ஏனைய இனங்களுக்கு நிகராக முஸ்லிம் சமூகமும் சமத்துவ உரிமைகளுடன் தலைநிமிர்ந்து வாழ முடியும் என்பதையும் எமது இளம் தலைமுறையினரின் எதிர்காலம் பிரகாசமாக அமையும் என்பதையும் நான் திடமாக நம்புகிறேன்.

இவற்றைக் கருத்தில் கொண்டே நான் ஐக்கிய தேசியக் கட்சியில் அரசியல் பயணத்தை மேற்கொள்ளத் தீர்மானித்தேன்.

நாட்டில் பல தேசியக் கட்சிகள் இருக்கின்ற போதிலும் ஏனைய தேசியக் கட்சிகளுடன் ஒப்பிடுகையில் முதலாளித்துவ கொள்கை சார்ந்த ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே முஸ்லிம்களை அரவணைத்துச் செல்லக்கூடிய கட்சியாக இருக்கிறது.

அதனாலேயே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தோற்றத்திற்கு முந்திய காலங்களில் முஸ்லிம்கள் பெருவாரியாக ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்து வந்திருக்கின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸ் எதிர்கொண்ட முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க. வேட்பாளராகப் போட்டியிட்ட ரணசிங்க பிரேமதாசா அவர்களுக்கே தலைவர் அஷ்ரப் அவர்கள் ஆதரவு வழங்கும் தீர்மானத்தை மேற்கொண்டிருந்தார் என்பது மாத்திரமல்லாமல் தனக்குரிய தேர்தல் போன்றே அவரது வெற்றிக்காக பிரசாரங்களை மேற்கொண்டு கடுமையாக உழைத்து, அந்த வெற்றியை ஈட்டிக்கொடுத்தார் என்பதை எல்லோரும் அறிவோம்.

இது இவ்வாறிருக்க தறபோதைய சூழ்நிலையில், அதல பாதாளத்தில் வீழ்ந்திருக்கின்ற நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பக் கூடிய வல்லமை ஐ.தே.க. தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மட்டுமே இருக்கிறது என்கிற யதார்த்தம் உணரப்பட்டதனாலேயே பாராளுமன்றத்தினால் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.

நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் மற்றும் எரிவாயு போன்ற தட்டுப்பாட்டினால் நாடு ஸ்தம்பிதமடைந்ததையும் நமது தாய்மார்கள் கூட இவற்றுக்காக வரிசைகளில் நின்று அல்லல்பட்டதையும் எவரும் இலகுவில் மறந்து விட முடியாது. குழந்தைகளுக்குக் கூட பால் மா கிடைக்கவில்லை. அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவியிருந்தது.

இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில்தான் சர்வதேச அங்கீகாரம் பெற்ற இராஜதந்திர தொடர்புகளைக் கொண்டிருக்கின்ற ஒரு தலைவரான ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக பொறுப்பேற்று, இப்பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்.

அவரது மதிநுட்பத்தினால் சர்வதேச நாடுகளின் மனிதாபிமான உதவிகள் எமது நாட்டுக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றன. ஜனாதிபதியின் இடைவிடாத கடின உழைப்பால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியும் கிடைக்கப்பெறவிருக்கிறது. இதன் மூலம் இன்னும் சில மாதங்களில் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதற்கான சமிக்ஞைகள் நம் கண்முன்னே தெரிகின்றன.

இந்நிலையில்தான் சமூகத்தின் நலன் கருதியும் கிழக்கு மாகாண அபிவிருத்தியை இலக்காகக் கொண்டும் நான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் கைகோர்த்து ஐக்கிய தேசியக் கட்சியில் எனது அரசியல் பயணத்தை முன்னெடுக்கத் தீர்மானித்திருக்கிறேன்.

குறிப்பாக ஐ.தே.க. முக்கியஸ்தர்களான தயா கமகே, அனோமா கமகே போன்றோருடன் சேர்ந்து, இனப்பாகுபாடுகளுக்கப்பால் அம்பாறை மாவட்டத்தையும் முழுக் கிழக்கு மாகாணத்தையும் கட்டியெழுப்புகின்ற ஒரு புதிய அத்தியாயத்தை தோற்றுவிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

இதன் அடிப்படையிலேயே கடந்த 03 மாதங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் புத்திஜீவிகள் அமைப்பான United Professional Forum என்கிற ஐக்கிய தொழில்வான்மையாளர் அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினராக அக்கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் உள்வாங்கப்பட்டேன்.

தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளராகவும் கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் பிரதேசங்களுக்கான ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்.

இப்பொறுப்புகளை சுமந்திருக்கின்ற நான் இந்த உள்ளூராட்சித் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் கட்சியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வதற்கான வேலைத் திட்டங்களை தொடங்கியிருக்கிறேன்.

இப்பகுதியில் மங்கிமறைந்து போயிருக்கின்ற ஐக்கிய தேசிய கட்சியை மீளக்கட்டியெழுப்புவது என்பது
மிகவும் சவால் நிறைந்த கடினமான பயணமாக இருக்கும் என்பதை நான் நன்கறிவேன். எவ்வாறாயினும் இப்பயணத்தை இறைவன் துணையுடன் வெற்றிகரமாக முன்கொண்டு செல்ல முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

ஆகையினால் தேசியத்தில் அரசியல் மாற்றம் கண்டதுபோல் கிழக்கில் மாற்றத்தை எதிர்பார்க்கும் இளையோர், புத்திஜீவிகள் உட்பட மக்கள் அனைவரும் நம்பிக்கையுடன் என்னோடு கைகோர்க்குமாறு அறைகூவல் விடுக்கின்றேன்.

அதேவேளை, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை ஸ்தாபிப்பதற்காக விரிவுரையாளர்கள் சார்பில் முன்னின்று செயற்பட்ட சிரேஷ்ட பேராசிரியர் எம்.ஐ.எம்.கலீல் தலைமையில் கிழக்கு மாகாணத்திலுள்ள புத்திஜீவிகள் மற்றும் கல்வியியலாளர்களை கட்சியின் மேற்படி United Professional Forum எனும் அமைப்புடன் ஒருங்கிணைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பதையும் அறியத் தருகின்றேன்- என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

S.M.kaleel
Sainthamaruthu

0779599929

No comments

Powered by Blogger.