வாதம் களைந்து வாஞ்சை வளர்ப்போம்
வாதம் களைந்து வாஞ்சை வளர்ப்போம்!
பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் விடுக்கும் சகோதரத்துவ அழைப்பு!
எமது அரசியல் முன்னெடுப்புகள் தொடர்பில் கேள்விகளை கேட்கின்ற; விமர்சனங்களை முன்வைக்கின்ற சகோதரர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து சினேகபூர்வமான உரையாடல் ஒன்றை செய்ய விரும்புகின்றேன்.
அரசியல் என்பது நமது வாழ்க்கையின் அத்தனை அம்சங்களிலும் ஆதிக்கம் செலுத்துகிறது.
ஏழை-பணக்காரன்; படித்தவர்- படியாதோர்; சிறுவர்கள்- முதியவர்கள்;
ஆண்கள்-பெண்கள் என எவரையும் அது விட்டு வைப்பதில்லை.
ஏன்... பிறக்கவிருக்கும் நமது குழந்தைகளின் தலைவிதியினைக் கூட அது தீர்மானித்து விடுகிறது என்பதே உண்மையாகும்.
"அரசியலில் ஆர்வம் இல்லை" என சிலர் கூறிக் கொண்டாலும், அல்லது ஒதுங்கிக் கொள்ள நினைத்தாலும் அரசியல் ஏற்படுத்தும் பாதிப்புகளில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது.
அரசியல் தீர்மானங்களை ஏன் மிக சரியாக எடுக்க வேண்டும் ? அவ்வாறு செய்யத் தவறினால் அதன் பாரதூரம் எப்படி அமையும் என்பதனை ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தக்கூடிய பெறுமதியான/கூரான ஒரு கத்தியினை தீயவன் ஒருவனின் கைகளில் ஒப்படைத்தால் அதை வைத்து அவன் நம்மையே அச்சுறுத்துவான், கொள்ளை அடிப்பான், சில சந்தர்ப்பங்களில் நம்மை கொன்று விடுவான். ஆனால் அதே கத்தி ஒரு மருத்துவரின் கையில் இருந்தால் அது மனிதர்களின் உயிர் காக்க உதவும்.
அரசியலும் அப்படித்தான்.
அரசியல் பொறுப்பானது நேர்மையான மனிதர்களின் கைகளில் கிடைத்தால் அது சமூகத்தை வாழ வைக்கிறது.
மக்களுக்கும் நாட்டுக்கும் நிம்மதியும், சந்தோஷமும், கௌரவமும் கிடைக்கிறது.
ஒரு நாட்டை ..ஒரு பிரதேசத்தை.. சுபீட்சம் அடையச் செய்கிறது.
அதுவே தீயவர்களின் கைகளில் கிடைத்தால் சமூகத்தின் எதிர்காலத்தையே நாசமாக்கி விடுகிறது. நாம் தற்போது சந்தித்திருக்கும் இந்த அவல நிலைக்கு அதுவே அடிப்படை காரணமாகும்.
நாடு எக்கேடு கெட்டு போனாலும் பரவாயில்லை நாம் தனித்தனியாக உழைத்து வாழ்ந்து விடலாம் என்று தான் பெரும்பாலான மக்கள் இத்தனை காலம் நம்பிக்கொண்டிருந்தார்கள். அரசியல் நிர்வாகமானது அடிமட்டம் முதல் உயர் மட்டம் வரை தீயவர்களின் கைகளில் இருக்கும் போது நம் சொந்த உழைப்பில் கூட நிம்மதியாக வாழ முடியாது என்பதனை இப்போது நிதர்சனமாக/அனுபவ ரீதியாக நாம் கண்டிருக்கிறோம்; உணர்ந்திருக்கிறோம்.
இதன் காரணமாக,
நம் சமூகத்தில் முன்னரை விட இப்போது பலரும் அரசியல் பற்றி பேசுகிறார்கள். நல்லது நடக்க வேண்டுமென ஆசைப்படுகிறார்கள்.
தீயவர்கள் கூட்டமாக இருந்து செய்யும் தீமைகளை நாம் தனித்தனியாக நின்று முறியடிக்க முடியாது. தீயவர்களின் முகாமில் ஓரிரு நல்லவர்கள் சேர்ந்து விடுவதாலும் இது நடக்காது.
தீமைகளை முறியடித்து நன்மைகளை நிலை நாட்டுவதற்கு ஒரு கூட்டு உழைப்பு அவசியமாகும். நன்மையை இலக்காக கொண்டவர்கள், நன்மையை நேசிப்பவர்கள், தீமையினை வெறுப்பவர்கள் அத்தனை பேரும் ஒரே அணியாக இருக்க வேண்டும்.
இந்த புரிதலின் அடிப்படையில் தான் 17 வருடங்களுக்கு முன்னால் எமது அரசியல் பணியினை ஒரு கூட்டு முயற்சியாக தொடங்கி வைத்தோம். நன்மையை நேசிக்கும்; அதனை வாழ வைக்க நினைக்கும் அத்தனை பேரும் இதில் பங்காளிகளாக மாறும்படி அழைத்தோம்.
ஏராளமான சகோதரர்கள் இந்த அழைப்பினை ஏற்று நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்களிப்பு செய்தார்கள்.
அந்த ஒத்துழைப்பு.. அத்தோடு இறைவனின் அருளும் காரணமாக இன்று புறக்கணிக்க முடியாத; தீர்மானமிக்க அரசியல் சக்தியாக நாம் மாறி இருக்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்!
அரசியல் அல்லது சமூகப் பணி என்று வருகிற போது விமர்சனங்கள் தவிர்க்க முடியாதவை. "புகழ்ச்சிகளால் அழிவதைவிட விமர்சனங்களால் வாழ்வதே சிறந்தது" என்பதனை உறுதியாக நம்புகிறோம்.
எனவேதான், விதண்டாவாதங்கள் அற்ற அறிவுபூர்வமான ஆரோக்கியமான விமர்சனங்களை நாம் எப்போதும் வரவேற்கின்றோம்.
அந்த வகையில் எம்மைப் பற்றிய விமர்சனங்களை குற்றச்சாட்டுகளை ஆலோசனைகளை சொல்லுகின்ற..சொல்ல விரும்புகின்ற அத்தனை சகோதரர்களையும் நேருக்கு நேராக சந்தித்து காது கொடுத்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிய விரும்புகிறோம்.
பொதுவாக இரண்டு காரணங்களின் அடிப்படையில் விமர்சனங்கள் உருவாக முடியும்.
முதலாவது, பிழையான புரிதல்கள்.
இரண்டாவது உண்மையிலேயே நடந்த தவறுகள்.
இந்த சந்திப்புகள் மூலம் பிழையான புரிதல்களுக்கு தெளிவுகளை வழங்க முடியும் என நம்புகிறேன். அல்லது உண்மையிலேயே அது எம் பக்க தவறுகளாக இருந்தால் அவற்றை ஏற்றுக்கொண்டு அதற்கான திருத்தங்களை உள்வாங்கி முன் செல்ல நேர்மையாக விருப்பம் கொண்டுள்ளோம்.
எனவே, காத்தான்குடியிலோ ஏனைய வெளியூர்களிலோ அல்லது நீங்கள் வசிக்கும் வெளிநாட்டிலோ உங்களை நேரடியாக சந்தித்து பேச விரும்புகிறேன்.
இதுவரை காலமும் நீங்கள் முன்வைத்த விமர்சனங்களை கேள்விகளை என்னிடம் நேரடியாக முன்வைக்க வருமாறு அழைக்கிறேன்.
உங்கள் பெயர் மற்றும் தொடர்பிலக்க விபரங்களையும் எந்த பிரதேசத்தில் சந்திக்க விரும்புகிறீர்கள் என்பதையும் எனது Inbox மூலமாக அறியத் தருமாறு அன்புடன் அழைக்கிறேன்.
இந்த மண்ணில் நன்மையை நிலைநாட்டி நல்லதொரு அரசியல் நிர்வாகத்தை உருவாக்கி நமது மக்களுக்கும் முழுநாட்டுக்கும் முன் மாதிரியான அரசியல் நிர்வாக முறை ஒன்றினை கூட்டாக இணைந்து செய்வதற்கு முன்வருமாறு உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.
Eng.Abdur Rahman
No comments